இந்தியா - பாகிஸ்தான்:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் விறுவிறுப்பை எட்டியிருக்கிறது. அந்தவகையில் இன்று (ஜூன் 9) நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 19 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.


இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள். இதில் 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற விராட் கோலி 1 பவுண்டரி மட்டும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி:



இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி மொத்தம் 12 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 13 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது களத்தில் இருங்கிய ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்தார் அக்ஸர் படேல்.


அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட்:


இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அந்தவகையில் மொத்தம் 18 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 20 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ரிஷப் பண்ட் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.


அக்ஸர் படேல் விக்கெட்டுக்கு பிறகு களம் இறங்கியா சூர்யகுமார் யாதவ் 8 பந்துகள் களத்தில் நின்று 1 பவுண்டரி  யுடன் 7 ரன்கல் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடி வந்த ரிஷப் பண்ட்  விக்கெட்டை பறிகொடுத்தார்.


120 ரன்கள் இலக்கு:


மொத்தம் 31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா டக் அவுட் ஆகி வெளியேற ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் நடையைக் கட்டினார். 17.4 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.


அடுத்து களம் இறங்கிய அர்ஸ்தீப் சிங் 9 ரன்களும் முகமது சிராஜ் 7 ரன்களும் எடுக்க 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய உள்ளது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை நஷீம் ஷா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.