IND Vs Pak Legends Champions: லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. முன்னாள் வீரர்களுக்கான இந்த போட்டி இங்கிலாந்து நடைபெற்றது. இறுதிப்போடிட்யில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்: இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் முறையாக நடைபெறும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. பிரதான சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பரம எதிரிகளாக கருதப்படும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், யார் சாம்பியன் பட்டம் வெல்வர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பாகிஸ்தான் பேட்டிங்:
பர்மிங்ஹாமில் உள்ள எட்க்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்ச தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரன் அக்மல் 24 ரன்களிலும், சர்ஜீல் கான் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மக்சூத் 21 ரன்களில் பெவிலியன் திரும்பிய, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோயப் மாலிக் 41 ரன்களை சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தன்வீர் 9 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளையும், வினய் குமார், பவன் நெகி மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய அணி அபார வெற்றி:
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான உத்தப்பா வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராயுடு, 30 பந்துகளில் 50 ரன்களை விளாசி அணிக்கு நல்ல வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் குர்கீரத் சிங் மான் 34 ரன்களை சேர்க்க, அதிரடியாக விளையாடிய யூசப் பதான் 30 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது, அந்த ஓவரின் முதல் பந்திலேயே இர்ஃபான் பதான் பவுண்டரி விளாசி இலக்கை எட்ட உதவினார். இதன் மூலம் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.