ஆசிய கோப்பைத் தொடர்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் இடையேயான போட்டியுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில், லீக் போட்டியில் ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.


இந்தியா - பாகிஸ்தான்:


இந்த தொடரில் இந்திய அணிகள் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையிலே நடைபெற உள்ளது. இலங்கையில் இது மழைக்காலம் என்பதால் அங்கு ஒவ்வொரு போட்டி நடைபெறும்போதும் மழை பெய்து வருகிறது. இதனால், போட்டிகள் முழுமையாக நடைபெற முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.




இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கொழும்பு மைதானத்தில் மோத உள்ளன.இந்த நிலையில், அன்றைய தினம் போட்டி நடைபெறும் கொழும்பு மைதானத்தில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மழை பெய்யுமா? பெய்யாதா?


இலங்கை வானிலை மைய இயக்குனர் அதுலா கருணநாயகே கூறியதாவது, “ இந்த வருடத்தில் இந்த காலம் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும் காலம் ஆகும். இதனால், இலங்கையின் தென் மேற்கு பகுதியில் அதிகளவில் மழை பெய்யும். கடந்த இரண்டு வாரங்களில் மேற்கு பகுதியில் அதிகளவு மழை பெய்வதை நாம் பார்த்திருப்போம். செப்டம்பர் 9-ந் தேதி மேற்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஆனால், 9-ந் தேதிக்கு பிறகு வெயிலும், மேகமூட்டத்துடனும் காணப்படும். சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.”  என்றார்.




இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரும் 10-ந் தேதி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் சூப்பர் 4 ஆட்டத்தில் மோத உள்ளனர். சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆடும் முதல் போட்டி இதுவாகும். ஏற்கனவே இந்திய அணி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுடன் ஆடிய ஆட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியுடன் இந்தியா ஆடிய முதல் போட்டியே மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.


அடுத்து நேபாளத்துடன் ஆடிய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு இந்தியா டக்வொர்த் லிவீஸ் விதிப்படி வெற்றி பெற்றது. மழை வரும் காலத்தில் இலங்கையில் இந்த போட்டி நடத்தப்படுவதால் ரசிகர்கள் மிக கடுமையாக போட்டி ஏற்பாட்டை விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், இந்திய – பாகிஸ்தான் அணிகள் வரும் 10-ந் தேதி மோதும் போட்டியில் மழையால் பெரியளவு பாதிப்பு இருக்காது என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Yuzvendra Chahal: காத்திருப்பு கனவா போச்சுங்க.. நான் ஆடப்போறேன் வேற நாட்டுல மேட்சுங்க.. வெளியூர் கிளம்பும் சாஹல்!


மேலும் படிக்க: SL vs AFG: திட்டமிட்டு வெளியேற்றப்பட்டதா ஆப்கானிஸ்தான்..? சூப்பர் 4-ல் இருந்த வாய்ப்பு மிஸ்ஸானதுதான் ட்விஸ்ட்!