பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது 100வது டி20 போட்டியில் விராட் கோலி மீண்டும் பார்முக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவளித்து வருகின்றனர்.
ஃபார்மிற்காக போராடி வரும் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி வரவிருக்கும் ஆசிய கோப்பை 2022 தொடரில் 41 நாள் ஓய்வுக்கு பிறகு திரும்புகிறார். பலரும் இந்திய அணிக்குள் விராட் கோலி வருகை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் விராட் கோலி அணிக்குள் இருப்பது பலம்தான். தொடக்க விக்கெட்கள் டக்கென்று சரிந்தால் கோலி சரிவில் இருந்து மீட்பார் என்றும், மற்ற சிலர் சுத்தமாக பார்மில் இல்லாத ஒருவரை எப்படி அணியில் எடுக்கலாம், அதற்கு ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கலாமே என்றும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கோலி மீண்டும் தன் அதிரடியை காட்ட வேண்டுமென அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்
இந்த நிலையில், ஆசிய கோப்பைரோஹித் சர்மா தலைமையிலான அணி (இன்று )ஆகஸ்ட் 28 ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தனது 100 வது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார். கடந்த 2010 ம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக டி20 தொடரில் அறிமுகமான கோலி, தனது 100 வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விராட் கோலி பழைய தளபதியாக எதிரணியை மிரட்ட வேண்டும் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஆதரவளித்து வருகின்றனர்.
புதிய மைல்கல் :
இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய 14 வது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கோலி பெற உள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை 132 டி20 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லருக்குப் பிறகு அனைத்து வடிவங்களிலும் 100 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும், முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற இருக்கிறார்.