இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த சூழலில் அவர் கொரோனா தொற்றில் குணமடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 






ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டி (இன்று) ஆகஸ்ட் 28 அன்று நடைபெறுகிறது. அந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. தற்போது இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்ததாக கூறப்படுகிறது. 


பிசிசிஐ மருத்துவப் பணியாளர்களால் பரிசோதிக்கப்பட்டு, ராகுல் டிராவிட்டுக்கு கொரொனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இதையடுத்து, டிராவிட் துபாய்க்குப் புறப்பட்டு சென்று, நேற்று இந்திய அணி மேற்கொண்ட பயிற்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.






முன்னதாக, டிராவிட்டுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டபோது, இவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதன் காரணமாக இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டார். தற்போது டிராவிட் மீண்டும் அணிக்கு திரும்பியதால் லக்‌ஷ்மண் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிக்கு முன்பு நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்காக ஜிம்பாப்வே சென்றிருந்தார். அங்கு ஜிம்பாவே அணிக்கு எதிராக கே.எல். ராகுல் தலைமையில் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. 


போட்டி விவரம் : 


 உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் (இன்று) 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும். 


சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 


ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்,ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சாஹல், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இந்தத் தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அதேபோல் ஹர்ஷல் பட்டேலும் காயம் காரணமாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.