2022 ஆசிய கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான பாபர் அசாம், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அதிரடியாக விளையாட உள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு திரும்புகிறார். 


ஆசியாவின் இரண்டு பெரிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பலரும் விராட் கோலியில் பார்ம் குறித்தும், பாபர் அசாமின் திறமை குறித்து ஒப்பீடுகள் செய்து வருகின்றனர்.


இந்த பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் பாகிஸ்தான் vs இந்தியா மோதும் இன்றைய போட்டியின்போது இரு நாட்டு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் எப்படி மோதி கொள்வார்கள் என்ற காமெடியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இரு நாட்டு ரசிகர்களால் அதிகளவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது. 






முன்னதாக, வாசிம் ஜாஃபர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் விளையாடும் XI ஐ கணித்தார். அதன் விவரத்தையும் இங்கே காணலாம் .






ஜாஃபர் தனது இந்திய லெவன் அணியில் அனுபவ ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. மேலும்,  தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் ஒருவர் மட்டுமே விளையாடுவார் என்றும், அதில் பண்ட்க்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தால், அவர் நம்பர் 5 இல் பேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 


போட்டி விவரம் : 


 உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் (இன்று) 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும். 


சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 


ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்,ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சாஹல், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இந்தத் தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். அதேபோல் ஹர்ஷல் பட்டேலும் காயம் காரணமாக இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.