இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக இந்திய அணியின் பேட்டிங் இருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் 5 வீரர்கள் டக் அவுட்டாகினர்.


இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து வீரர்கள் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியர் ஓரோர்கி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேட் ஹென்றி அனுபவம் வாய்ந்த மூத்த பந்துவீச்சாளர். ஆனால், வில்லியம் ஓரோர்கி இளம் வீரர் ஆவார்.


யார் இந்த 2கே கிட்?


இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்களையும், துணை கேப்டன் பும்ராவையும் ஆட்டமிழக்கச் செய்தார் ஓரோர்கி. மொத்தம் 12 ஓவர்கள் மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் ரோர்கி.


வில்லியம் ஓ ரோர்கி 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்தவர். நியூசிலாந்து அணி தனது அடுத்த தலைமுறைக்கான வீரர்களை உருவாக்கி வருகிறது. அவர்களில் முக்கியமானவராக ஓரோர்கி உள்ளார்.  இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.


வளரும் நட்சத்திரம்:


நியூசிலாந்து அணியின் தவிர்க்க முடியாத டெஸ்ட் பந்துவீச்சாளராக உருவெடுத்து வரும் ஓரோர்கி இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 93 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3 ஒருநாள் போட்டியில் ஆடி 5 விக்கெட்டுகளையும், 3 டி20 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


நியூசிலாந்து அணிக்காக இவர் ஆடினாலும் இவர் பிறந்தது இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரத்தில் ஆகும். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் நியூசிலாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் தேசிய அணிக்கு தேர்வாகினார்.  நியூசிலாந்து அணியின் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காகவும் இவர் சிறப்பாக ஆடியுள்ளார். கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார்.