MS Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது சொந்த ஊரானா ராஞ்சியில் உள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி வீரர்களை சந்தித்து தனது வாழ்த்துகளைச் தெரிவித்துள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இன்று தனது சொந்த ஊரானா ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த இந்திய அணியின் வீரர்களை சந்தித்தார். இந்த திடீர் விசிட்டை எதிர் பார்க்காத இந்திய அணி வீரர்கள் செய்வதறியாது மகிழ்ச்சியில் திகைத்தனர். தோனியிடம் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தனது ஜெர்சியில் தோனியிடம் கையெழுத்து வாங்கினார். 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி-20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியதோடு, ஐசிசி தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி-20 தொடர் நாளை தொடங்க உள்ளது.






முதல் டி-20 போட்டி:


ஒருநாள் தொடரில் விளையாடிய ரோகித், கோலி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு, டி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. ஒருநாள் தொடரை போன்று டி-20 தொடரையும் கைப்பற்ற இந்திய அணியும், டி-20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணி நிலவரம்:


சுப்மன் கில், இஷான் கிஷன்,  சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் பாண்ட்யா  ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் இந்திய அணிக்கு பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற டி-20 தொடரிலும், பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்து அணி நிலவரம்:


நியூசிலாந்து அணியை பொருத்த வரையில் வில்லியம்சன், சவுதி மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூத்த வீரர்கள் ஓய்வில் உள்ள நிலையில், பென் லிஸ்டர் அறிமுக வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவராக உள்ளார். மிட்செல் சாண்ட்னர் தலைமயில், நியூசிலாந்து அணி இந்த தொடரில் களமிறங்க உள்ளது.


ஹெட் டு ஹெட்:


இதுவரை 22 டி-20 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 12 போட்டிகளில் இந்திய அணியும், 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.


மைதான நிலவரம்:


போட்டி நடைபெற உள்ள ராஞ்சி மைதானம் சேஸிங்கிற்கு ஏற்ற மைதானமாக உள்ளது. இதுவரை அங்கு நடைபெற்றுள்ள 25 டி-20 போட்டிகளில், 16 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.


உத்தேச இந்திய அணி:


சுப்மான் கில், இஷான் கிஷன் (வி.கீ.), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் , குல்தீப் யாதவ்/யுஸ்வேந்திர சாஹல்


உத்தேச நியூசிலாந்து அணி:


ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல்,  மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிளேர் டிக்னர், இஷ் சோதி, பென் லிஸ்டர், லாக்கி பெர்குசன்