உலகக் கோப்பை 2023ன் முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. 


அடுத்ததாக 398 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி முதன்முதலில் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


இந்திய அணி சார்பில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து மிரட்ட, ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் பலமாக இருந்தனர். அதே நேரத்தில் முகமது ஷமி 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். 






இந்தநிலையில், இந்திய அணியும், ரோஹித் சர்மாவும் டாஸ் போடுவதில் முறைகேடு செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சிக்கந்தர் பக்த் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசியபோது, “ ரோஹித் சர்மா எப்போதும் டாஸ் போடும்போதெல்லாம், அதை வெகுதூரம் வீசுகிறார். பக்கத்தில் இருக்கும் மற்ற அணிகளின் கேப்டன் அந்த நாணயத்தை சென்று பார்ப்பதே கிடையாது. 


ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) மற்றும் பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் நிர்ணயித்தது தங்கள் பக்கம் போட்டியை மாற்றிக்கொள்கிறார்கள்.  ஐசிசி அதிகாரிகள் தவிர்க்க முடியாமல் இந்தியாவிற்கு சாதகமாக செயல்படுகிறார்கள்” என்றார். தற்போது இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி வருகிறது. 






உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்திறன் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விசித்திரமான கூற்றுக்களை கூறுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, ஹசன் ராசா என்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர், ஐசிசி மற்றும் பிசிசிஐயும் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஸ்விங் செய்யும் ஸ்பெஷல் பந்துகளை வழங்குகிறது என்று தெரிவித்தார். 


சிக்கந்தர் பக்த் யார்? பாகிஸ்தானுக்காக அவர் செய்த சாதனை என்ன?


சிக்கந்தர் பக்த் 66 வயதான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார். பக்த் டெஸ்ட் மற்றும் ODI வடிவங்களில் பாகிஸ்தான் அணிக்காக ஒரு பந்துவீச்சாளராக களமிறங்கியுள்ளார். 50 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பக்த், 1989 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.