IND vs NZ: சுப்மன்கில் கம்பேக் தருவாரா? கவலை தருவாரா? கோப்பை கனவில் இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான சுப்மன்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Continues below advertisement

champions trophy Final IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லப்போவது யார்? என்பதற்கான விடைக்கு நாளை இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வீழ்த்தியதற்காக இந்திய அணியும், 2023ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதியில் வீழ்த்தியதற்காக நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. 

Continues below advertisement

இறுதிப்போட்டி:

இரு அணிகளின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக பந்துவீச்சு மாறியுள்ளது. ஏனென்றால், துபாய் மைதானம் சுழலுக்கு சாதகமாக திகழ்கிறது. இதை எதிர்த்து திறம்பட பேட்டிங் செய்யும் அணியே நாளை கோப்பையை கையில் ஏந்த உள்ளது. இந்திய அணியில் ரோகித், சுப்மன்கில், விராட் கோலி, அக்ஷர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், பாண்ட்யா, ஜடேஜா, கே.எல்.ராகுல் என மிகப்பெரிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் தொடக்க வீரர் சுப்மன்கில்லின் ஃபார்ம் மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. 

கம்பேக் தருவாரா சுப்மன்கில்?

ஐசிசி நடத்தும் தொடர்களில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அவர் இதுவரை சிறப்பாக ஆடியதில்லை. இந்த தொடரிலும் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் விளாசிய சுப்மன்கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் எடுத்தார்.  நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

இந்த சூழலில் நாளை நடக்கும் போட்டியில் மேத் ஹென்றி, ஜேமிசன், வில்லியம் ஓ ரோர்கி, சான்ட்னர், ப்ராஸ்வெல், ப்லிப்ஸ், ரவீந்திரா ஆகியோரது பந்துவீச்சை சமாளித்து ஆட வேண்டியது கில்லிற்கு உள்ள சவால் ஆகும். 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆடிய அனுபவம் கொண்ட சுப்மன்கில் நாளைய போட்டியில் திறம்பட பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

சிறப்பாக ஆட வேண்டிய அவசியம்:

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான சுப்மன்கில் இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 744 ரன்கள் எடுத்தார். இதில் 15 அரைசதங்களும், 8 சதங்களும் 1 இரட்டை சதமும் அடங்கும். இந்திய அணியின் துணை கேப்டனாக இந்த தொடரில் களமிறங்கியுள்ள சுப்மன்கில்லை வருங்கால இந்திய அணியின் கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் தயார் செய்து வருகிறது. 

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக உள்ள சுப்மன்கில்லை வருங்கால இந்திய அணியின் நட்சத்திரமாக உருவாக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ஆனால், மிகவும் முக்கியமான தொடர்களில் அவர் இதுவரை பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த சூழலில், நாளைய போட்டியில் அவர் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும். 

சுழல் சவால்:

குறிப்பாக, மைதானம் சுழலுக்கு நன்றாக ஒத்துழைப்பு அளிக்கும் என்பதால் சான்ட்னர், ரவீந்திரா, ப்ராஸ்வெல், ப்லிப்ஸ் ஆகியோரது சுழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என்று சுப்மன்கில்லுக்கு முன் சவால் உள்ளது.

Continues below advertisement