Ind vs NZ CT Final 2025: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள,  ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது.


ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல்:


ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிச் சுற்று முடிவுற்றதை தொடர்ந்து, அதில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோத உள்ளன. ஏற்கனவே இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் லீக் சுற்றில் மோதியதால், மைதானத்தில் சூழல் எப்படி இருக்கும் என இரண்டு அணிகளும் அறிந்திருக்கின்றன. இதனால், போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவை காட்டிலும் நியூசிலாந்து அணி வலுவாக இருப்பதற்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.



சுழற்பந்து வீச்சு தாக்கம்:


சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுடன் போட்டியிடக்கூடிய அல்லது கடும் நெருக்கடி தரக்கூடிய அணி என்றால் அது நியூசிலாந்து அணி மட்டும் தான். இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே சுழற்பந்து வீச்சில் உள்ள பன்முகத்தன்மையின் அடிப்படையில் வலுவாக உள்ளனர். லீக் சுற்று போட்டியில் அவர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளித்தாலும், இறுதிப்போட்டியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஏற்கனவே விளையாடி அனுபவம் தங்களை மெருகேற்ற நியூசிலாந்திற்கு வாய்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் ஃபைனல் விளையாடப்படுவதால், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


அதிரடி காட்டும் வேகப்பந்துவீச்சு:


லீக் போட்டியில் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் ஸ்விங்கை உருவாக்கினர். இந்தியா இங்கு விளையாடிய மற்ற மூன்று போட்டிகளில், சீம் அசைவு இல்லை. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக, அது வேறுபட்டது. அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்களின் உயரம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.  அவர்கள் உருவாக்கும் கூடுதல் பவுன்ஸ், ஐசிசி போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சமீப காலங்களில் இந்தியாவின் டாப் ஆர்டருக்கு சிக்கலாக அமைந்துள்ளது. முதல் பவர்பிளேயில் ரன்கள் மிக முக்கியமானவை என்பதால், இதை எதிர்கொள்ள இந்தியா ஒரு திட்டவட்டமான திட்டத்தை வகுக்க வேண்டும்.


ஃபீல்டிங்கில் மாஸ் காட்டும் நியூசிலாந்து:


இந்தியாவிற்கு எதிரான போட்டியின் மூலம், நியூசிலாந்து அணி களத்தில் ஃபீல்டிங் மூலம் மட்டுமே 30-40 ரன்களை சேமிக்கும் திறன் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. அது போதாது என்றால், அவர்கள் பெரும்பாலும் பாதி வாய்ப்புகளை கூட அட்டகாசமான கேட்சுகளாக மாற்றுகிறார்கள். வேறு எந்த அணியிலும் இல்லாத வகையில், சாண்ட்னர், வில் யங் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் போன்றவர்கள் சிறந்த ஃபீல்டர்களாக திகழ்கின்றனர். கூடுதலாக எதிரணி வீரர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய க்ளென் பிலிப்ஸ்ம் நியூசிலாந்து அணியில் இருக்கிறார். அவர் தனது விதிவிலக்கான ஃபீல்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படும் போது, ​​அவர்களின் சிறந்த ஃபீல்டர்கள் அனைவரும் வளையத்தில் இருப்பதால், அவர்கள் சிங்கில்ஸ்களை நிறுத்துவதன் மூலம் அழுத்தத்தை அதிகரிக்கின்றனர். எனவே இந்தியா ஒவ்வொரு ரன்னையும் சம்பாதிக்க சிரமப்பட வேண்டி இருக்கும்.


ஆழமான பேட்டிங் ஆர்டர்:


இந்தியாவைப் போலவே, நியூசிலாந்து அணியும் சூழ்நிலைக்கு ஏற்ற பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. லீக் போடிட்யில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், கம்பேக் கொடுக்கும் திறன் கொண்டுள்ளனர். ரச்சின், யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் விரைவான தொடக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிடில் ஆர்டருக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கி தருகின்றனர். பெரும்பாலான அணிகள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடுவதில் சிரமப்பட்டாலும், டாம் லாதம், டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் போன்றவர்கள் சிறந்து விளங்குகின்றனர். 


எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்த, இந்திய அணி பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து விதத்திலும் சிறந்த விளங்க வேண்டி உள்ளது. அதனை ரோகித் தலைமையிலான அணி செயல்படுத்தி, மேலும் ஒரு ஐசிசி கோபபையை வெல்லுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.