இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளது. ரோகித், கோலி, ஜடேஜா, அஸ்வின், ஷமி, ரகானே, புஜாரா என முக்கிய வீரர்கள் அனைவரும் 35 வயதை கடந்து தங்களது கிரிக்கெட் வாழ்வின் இறுதி கட்டத்தில் உள்ளனர்.
இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து ஒரு விடிவெள்ளி:
இந்திய அணிக்கு தொடக்க காலம் முதலே சிறந்த சுழல் ஜாம்பவான்கள் பலமாக இருந்து வருகின்றனர். கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கிற்கு பிறகு இந்திய அணிக்கு பலமாக அஸ்வின்,ஜடேஜா இருந்து வருகின்றனர். இருவரும் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார்கள். இதனால், அடுத்த தலைமுறை சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குத் தேவைப்படுகிறார்கள்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் சிலர் இருந்தாலும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டிக்கு அடுத்த தலைமுறை சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் முழுமையாக இந்திய அணி நிர்வாகம் உருவாக்கவில்லை. குல்தீப் யாதவும், அக்ஷர் படேலும் இந்த வரிசையில் இருந்தாலும் இவர்களுடன் தற்போது இணைந்திருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்.
அசத்தும் ஆல்ரவுண்டர்:
குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் இருவருடன் ஒப்பிடும்போது மிகவும் இளையவரான வாஷிங்டன் சுந்தருக்கு தற்போது 25 வயதே ஆகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டுள்ள வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசினார்.
இந்த சூழலில், மும்பையில் நடைபெற்று வரும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்காக 18.4 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கேப்டன் லாதம், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகிய முக்கிய விக்கெட்டுகளுடன் அஜாஸ் படேலையும் வீழ்த்தினார். பந்துவீச்சாளராக மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தும் வாஷிங்டன் சுந்தர் களத்தில் நீண்ட நேரம் நின்று நிதானமாக ஆடும் திறனும் கொண்டவர்.
அஸ்வின் இடத்தை நிரப்புவாரா?
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர் அஸ்வின். சிறந்த ஆல்ரவுண்டரான அஸ்வின் இந்திய அணிக்காக டெஸ்டில் பல சதங்களையும் விளாசியுள்ளார். அஸ்வினின் இடத்தை நிரப்பும் வகையில் மற்றொரு தமிழரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் தற்போது இடம்பிடித்து அசத்தி வருகிறார்.
வாஷிங்டன் சுந்தர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 அரைசதத்துடன் 304 ரன்கள் எடுத்துள்ளார். 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 22 ஒருநாள் போட்டிகளில் 315 ரன்களும், 23 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார், டி20 போட்டிகளிலும் 52 போட்டிகளில் 161 ரன்னும், 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மூன்று வடிவ போட்டிகளிலும் எதிர்காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் வாஷிங்டன் சுந்தர் திகழ்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.