இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் டை ஆன நிலையில், இந்தியா தொடரை வென்றுள்ளது.






இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று தொடங்கியது முதலே மழை குறுக்கிட்டு வந்தது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பேட்டிங்கத் தேர்வு செய்தார்.


ஹர்திக் தலைமையில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 49 பந்துகளில் 59 ரன்களைக் குவித்தார். மறுபுறம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், 19ஆவது ஓவரில் இந்திய அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, போட்டியை முழுவதுமாக தன் பக்கம் திருப்பியது.


நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


இந்நிலையில் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்கள் ஆடியுள்ள நிலையில், மீண்டும் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.


டிஎல்எஸ் முறைப்படி 9 ஓவர்களுக்கு 75 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி சரியாக 9 ஓவர்களுக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.


இந்நிலையில் மழையால் இந்தப் போட்டி மேற்கொண்டு தொடராததால் ஆட்டம் டையில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் இந்தத் தொடரை வென்றுள்ளது.


மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இளம் இந்திய அணி அடித்து நொறுக்கி, சூர்ய குமாரின் அதிரடி சதத்தால் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டை ஆனதை அடுத்து இந்திய அணி தொடரை வென்றுள்ளது.