IND vs NZ 2nd T20:  நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களில் சுருண்டது.


192 ரன்கள் இலக்கு:


அதிரடியாக ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசினார்.


இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.


Suryakumar Yadav T20 Record: மிரட்டல் சதம்..! சூர்யகுமாரின் புதிய சாதனைகள் என்னென்ன தெரியுமா..?


முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசியுள்ளார். அவர் மொத்தம் 11 ஃபோர், 7 சிக்ஸர் என அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இந்த சதம் சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதாவின் இரண்டாவது சதமாகும். 






ஹாட்ரிக் விக்கெட்
தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பாண்ட்யா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரினஅ விக்கெட்டுகளை சவுதீ அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை அள்ளினார்.


தொடக்கமே தடுமாற்றம்:


இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஃபின் ஆலன் டக் அவுட்டாகி அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, டெவான் கான்வே உடன், கேப்டன் வில்லியம்சன் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர்.


எனினும், இந்தக் கூட்டணி 50 ரன்கள் சேர்த்தது. எனினும், இந்த பார்ட்னர்ஷிப்பை வாஷிங்டன் சுந்தர் பிரித்தார். அவர் வீசிய பந்தை தூக்கி அடித்தார் கான்வே. அந்த கேட்ச்சை அர்ஷ்தீப்சிங் லாவகமாக பிடித்தார். இதையடுத்து, களம் புகுந்த கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீசம், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




வில்லியம்சன் அரைசதம்


வில்லியம்சன் 48 பந்துகளில் அரைசதம் விளாசினார். எனினும், சிராஜ் பந்துவீச்சில் அவர் போல்டு ஆனார். அப்போது அவர் 61 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி நம்பிக்கையாக இருந்த வில்லியசனும் ஆட்டமிழந்ததை அடுத்து, நியூசிலாந்தின் நம்பிக்கை முழுமையாக தகர்ந்தது.






இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 ஆட்டம் நேபியரில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.