நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று முதல் செஷனில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
எனினும் உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற இரண்டாவது செஷனில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தொடங்கினர். அப்போது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லெதம் விக்கெட்டை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வீழ்த்தினார். அதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவர் தன்னுடைய 418ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜனை சிங்கை தாண்டினார். ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட் வீழ்த்திருந்தார். தற்போது அதனை அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளிலேயே தாண்டியுள்ளார்.
இந்நிலையில் தன்னை தாண்டிய அஸ்வினிற்கு ஹர்பஜன் சிங் ட்விட்டரில் ஒரு வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், "வாழ்த்துகள் அஸ்வின். இன்னும் நீங்கள் நிறையே விக்கெட்டை எடுக்க வேண்டுகிறேன். ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கட்டும். இதேபோல் சிறப்பாக பந்துவீசுகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 13ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில்தேவ் இரண்டாம் இடத்திலும், கும்ப்ளே முதலிடத்திலும் உள்ளனர்.
இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
வீரர்கள் | டெஸ்ட் போட்டிகள் | விக்கெட்கள் |
அனில் கும்ப்ளே | 132 | 619 |
கபில்தேவ் | 131 | 434 |
ரவிச்சந்திரன் அஸ்வின் | 80* | 418 |
ஹர்பஜன் சிங் | 103 | 417 |
நியூசிலாந்து அணி சற்று முன்பு வரை 131 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
மேலும் படிக்க: பத்தில் சிக்கிய சுழற்பந்து லெஜண்ட் ஷேன் வார்னே...! தற்போதைய நிலைமை என்ன?