இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் சதம், சுப்மன்கில் மற்றும் ஜடேஜா அரைசதங்கள் உதவியுடன் 345 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது.


அதனை தொடர்ந்து, மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்திற்கு எதிராக அஸ்வின் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ரஹானே தொடர்ந்து அஸ்வினுக்கே ஓவர்களை வாரி வழங்கினார். அவரது நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது.


இந்திய அணிக்கு குடைச்சல் அளித்து வந்த வில் யங், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 151 ஆக உயர்ந்தபோது 214 பந்தில் 15 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்திருந்த வில்யங் விருத்திமான் சஹாவிற்கு பதில் கீப்பிங் செய்த ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, அபாயகரமான நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். களமிறங்கியது முதல் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ரன்களை சேர்க்க மிகவும் தடுமாறினார். இருப்பினும் மறுமுனையில் அரைசதத்தை கடந்து டாம் லாதம் மிகவும் சிறப்பாக ஆடி வந்தார். அணியின் ஸ்கோர் 197 ரன்களை எட்டியபோது, டேஞ்சர் பேட்ஸ்மேன் வில்லியம்சன் 64 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்த நிலையில் உமேஷ்யாதவ் ஆட்டமிழந்தார். 






அவரை அடுத்து களமிறங்கிய ராஸ் டேலரை பெவிலியனுக்கு அனுப்பினார் அக்சர் பட்டேல். இந்த டெஸ்ட் போட்டியில் இதுதான் அவருக்கு முதல் விக்கெட். அதனை அடுத்து, ஹென்ரி நிக்கோல்ஸ், 95 ரன்கள் எடுத்து சதம் கடக்க இருந்த அதிரடி ஓப்பனர் லாதம், டாம் ப்ளண்டெல், டிம் சவுதி என அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் அக்சர் பட்டேல். இன்றைய போட்டி இன்னும் முடியாத நிலையில், மதியம் 3.20 மணி நிலவரப்படி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருக்கிறார் அக்சர். அவரது அசத்தல் பவுலிங்கால் நியூசிலாந்து அணி தடுமாறியது. அதனை தொடர்ந்து டெயில் எண்டர்களாக களமிறங்கிய ஜேமிசன், வில்லியம் சோமர்வில்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். இதனால், 10 விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது நியூசிலாந்து. இதனால் இந்திய அணியைவிட 49 ரன்கள் பின் தங்கியுள்ளது. 






இந்திய அணி பவுலர்களைப் பொருத்தவரை, அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கின்றனர். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண