இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி ஸ்ரேயாஸ் சதம், சுப்மன்கில் மற்றும் ஜடேஜா அரைசதங்கள் உதவியுடன் 345 ரன்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை எடுத்திருந்தது.
அதனை தொடர்ந்து, மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்களின் ஹைலைட்ஸ் இதோ!
1. சஹாவிற்கு கழுத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது கழுத்தை வலது மற்றும் இடது புறம் திருப்பமுடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக விருத்திமான் சஹாவிற்கு பதிலாக சப்டிடியூட் கே.எஸ். பரத் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று பிசிசிஐ அப்டேட் தந்தது. இதனால், இன்று சஹாவுக்கு பதிலாக பரத் கீப்பிங் செய்தார்.
2. மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது. அஷ்வின் பந்துவீச்சில் அதிரடி ஓப்பனர் யங் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.
3. அவரை அடுத்து களமிறங்கிய ராஸ் டேலரை பெவிலியனுக்கு அனுப்பினார் அக்சர் பட்டேல். இந்த டெஸ்ட் போட்டியில் இதுதான் அவருக்கு முதல் விக்கெட். அதனை அடுத்து, ஹென்ரி நிக்கோல்ஸ், 95 ரன்கள் எடுத்து சதம் கடக்க இருந்த அதிரடி ஓப்பனர் லாதம், டாம் ப்ளண்டெல், டிம் சவுதி என அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அக்சர் பட்டேல்.
4. இன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் அக்சர். அதவாது அக்சர் விளையாடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில், 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
5 அதனை தொடர்ந்து டெயில் எண்டர்களாக களமிறங்கிய ஜேமிசன், வில்லியம் சோமர்வில்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின்.
6. இதனால், 10 விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது நியூசிலாந்து. இதனால் இந்திய அணியைவிட 49 ரன்கள் பின் தங்கியுள்ளது.
7. இந்திய அணி பவுலர்களைப் பொருத்தவரை, அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கின்றனர்.
8. அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட இந்திய அணி களமிறங்கியது. மயாங்க் அகர்வால், சுப்மன் கில் ஓப்பனிங் களமிறங்கினர்.
9. இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில், ஜேமிசன் வீசிய பந்தில் 1 ரன் எடுத்திருந்த கில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
10. அவரை அடுத்து புஜாரா களமிறங்கினார். இன்றைய ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி. இதனால் 63 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது இந்திய அணி.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்