இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.
இந்திய அணியின் ஆட்டத்தை சுப்மன்கில் மற்றும் மயங்க் அகர்வால் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் மிகவும் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினர். டிம் சவுதி ஓவரில் சுப்மன்கில்லுக்கு தவறுதலாக எல்.பி.டபுள்யூ அளிக்கப்பட்டது. பின்னர், ரிவியூவில் அது நாட் அவுட் என்பது தெரியவந்தது. இதனால், சுப்மன்கில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கினார். அணியின் ஸ்கோர் 21 ஆக உயர்ந்தபோது ஜேமிசன் பந்தில் மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த இந்திய வீரர் சுப்மன்கில்லும், புஜாராவும் மிகவும் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்தனர். சுப்மன் கில் அவ்வப்போது பவுண்டரிகளை மைதானத்தின் எல்லைக்கோட்டிற்கு அனுப்பினார். இதனால், இந்திய அணி 16வது ஓவரில் 50 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய சுப்மன்கில் டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அரைசதத்தை அடித்தார்.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி 29 ஓவர்களில் 82 ரன்களை எடுத்திருந்தது. சுப்மன்கில் 87 பந்தில் 52 ரன்களுடனும், புஜாரா 65 பந்தில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் வேகம், சுழல் என்று மாறி, மாறி பயன்படுத்தினார். டிம் சவுதி, கைல் ஜேமிசன், அஜாஸ் படேல், வில்லியம் சோமர்வில்லே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தற்போது வரை உணவு இடைவேளை வரை விக்கெட்டுகள் விழவில்லை.
உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர் சுப்மன்கில் 52 ரன்கள் எடுத்த நிலையில், ஜேமிசன் பந்தில் போல்டாகி வெளியேறினார். அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஹானேவும், புஜாராவும் தற்போது ஆடி வருகின்றனர். மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் இவர்களிடம் இருந்து கிடைத்தால் மட்டுமே இந்தியா மிகப்பெரிய ரன்களை குவிக்க முடியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்