இந்திய அணியின் விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் நேற்று மழையால் தொடங்கவே இல்லாத நிலையில், இரண்டாவது நாளான இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. மழை பெய்துள்ள சூழலில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆனால் நடந்ததோ வேறு. இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதாவது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய சர்பராஸ்கானும் டக் அவுட் ஆனார். இதனிடையே யஜஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
5 வீரர்கள் டக் அவுட்:
23 ஓவர்கள் முடிவில் 34 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 20 ரன்களை பதிவு செய்தார். பின்னர் வந்த குல்தீப் யாதவ் 2 ரன்கள், ஜஸ்ப்ரித் பும்ரா 1 ரன்கள் எடுக்க முகமது சிராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார். இவ்வாறாக இந்திய அணி 31.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே எடுத்தது.
முன்னதாக, இந்திய அணியின் விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 8 வீரர்களில் 5 வீரர்கள் டக் அவுட்டாகி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.