டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் இந்தியா அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்தியா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இன்று நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அசத்தலாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார். இந்தப் போட்டியில் மூன்றாவது சிக்சர் விளாசியதன் மூலம் ரோகித் சர்மா யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது இந்தியா சார்பில் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பாக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் விளாசியிருந்தார். அவருடைய சாதனையை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா சார்பில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள்:
ரோகித் சர்மா - 34
யுவராஜ் சிங்- 33
விராட் கோலி- 24
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இன்னும் பல சிக்சர்கள் விளாசும் பட்சத்தில் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பார் என்று கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிகமாக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முன்னேறியுள்ளார். இவர் தில்ஷான் அடித்திருந்த 897 ரன்களை தாண்டி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
ரோகித் சர்மா தற்போது வரை 35 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 32 இன்னிங்ஸில் விளையாடி 904 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு முன்பாக இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில்(965), விராட் கோலி (989), மகேலா ஜெயவர்தனே(1016) ஆகியோர் உள்ளனர். தற்போது மகேலா ஜெயவர்தனே மற்றும் கெயில் ஆகிய இருவரும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாட வில்லை. இதன்காரணமாக விராட் கோலியுடன் இணைந்து ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இந்தியா-நெதர்லாந்து மேட்ச்சில் பூத்த காதல்.. ப்ரோபோஸ் செய்த இளைஞன்.. ரிசல்ட் தெரியுமா?