டப்ளினில் நடைபெற்று வரும் அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ருதுராஜின் அரைசதம், சாம்சன், ரிங்குசிங் மற்றும் ஷிவம் துபே அதிரடியால் இந்திய அணி 185 ரன்களை குவித்தது. இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி பும்ரா வீசிய முதல் ஓவரில் தடுமாறினாலும் அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரிலே 10 ரன்களை விளாசினர். இதனால், 2 ஓவர்களில் 18 ரன்களை எடுத்தது.


பிரசித் கிருஷ்ணா அபாரம்:


இதையடுத்து, 3வது ஓவரை வீசிய பிரசித்கிருஷ்ணா ஓவரில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் டக் அவுட்டானார். அதே ஓவரில் மற்றொரு வீரர் டக்கர் டக் அவுட்டாக 19 ரன்னுக்கு அயர்லாந்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்து வந்த டெக்டர் ரவி பிஷ்னோய் சுழலில் 7 ரன்களுக்கு போல்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் பால்ப்ரைன் – காம்பெர் ஜோடி அணியை மீட்கும் விதமாக ஆடினர்.




மிரட்டிய பால்ப்ரைன்:


இதனால், 8 ஓவர்களில் அந்த அணி 53 ரன்களை எடுத்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த காம்பெர் 18 ரன்களில் பிஷ்னோய் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் பால்ப்ரைன் தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார். ஷிவம்துபே வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அபாரமாக ஆடிய பால்ப்ரைன் அரைசதம் விளாசினார்.


தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை பால்ப்ரைன் வெளிப்படுத்த அந்த அணி 13.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. பால்ப்ரைனுக்கு ஒத்துழைப்பு அளித்த டாக்ரெட் 13 ரன்களில் தேவையில்லாமல் ரன் அவுட்டானார். இதனால், கடைசி 5 ஓவர்களில் அயர்லாந்து வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது. மனம் தளராத பால்ப்ரைன் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். அர்ஷ்தீப்சிங் வீசிய 16வது ஓவரில் பால்ப்ரைன் விக்கெட்கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி 72 ரன்களை விளாசிய பால்ப்ரைன் சர்வதேச டி20 போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.




தொடரை வென்றது பும்ரா படை:


அவர் 51 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கடந்த போட்டியில் அசத்திய மெக்கர்த்தி களமிறங்கினார். அவர் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அயர்லாந்தின் டெயிலண்ர்கள் சளைக்காமல் போராடினர். மார்க் அடெய்ர் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாச அயர்லாந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். பும்ரா வீசிய கடைசி ஓவரில் மார்க் அடெய்ர் 14 பந்தில் 3 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


கடைசியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப்சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.