இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித்சர்மா விலகியுள்ள நிலையில், இந்திய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் நாளை இந்திய அணி களமிறங்க உள்ளது. ரிஷப்பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் நாளை மோதும் டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் 36வது டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பும்ராவிற்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பும்ரா நிருபர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ரோகித்சர்மா மிகவும் முக்கியமான வீரர். நிச்சயமாக நாங்கள் அவரை இழந்துள்ளோம். அவர் அணியில் இல்லாமல் போனது எங்களது துரதிஷ்டவசமானது. அணித்தேர்வில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அதற்கு நீங்கள் நாளை வரை காத்திருக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணிக்கு கேப்டனாகியது குறித்தும், முன்னாள் கேப்டன்கள் தோனி, விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா குறித்து கேள்வி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பும்ரா, “ எம்.எஸ்.தோனி, விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா ஜாம்பவான் வீரர்கள். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிறைய பங்களித்துள்ளனர். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்’
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி லீசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆடியது. இந்த போட்டியில் பேட்டிங் செய்த ரோகித் சர்மாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஹோட்டலில் உள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பலமிகுந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோகித்சர்மா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க : ENG vs IND: 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எடுக்கவேண்டிய முக்கியமான 3 முடிவுகள் என்னென்ன?
மேலும் படிக்க : Mohammed Shami: T20 உலகக் கோப்பை தொடரில் ஷமி பங்கேற்பதில் சிக்கலா? என்ன காரணம்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்