இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் இன்று டி20 தொடர் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி சவுதாம்டன் நகரில் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 


 


இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி துவக்கத்தை தந்தார். இவர் 14 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசி 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடாவும் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 


 


இந்திய அணி முதல் 6 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். தீபக் ஹூடா 17 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா சூர்யகுமார் யாதவுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 


 


சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.இதன்காரணமாக இந்திய அணி 15 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடி வந்த ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய முதல் அரைசதத்தை ஹர்திக் பாண்ட்யா பதிவு செய்தார். 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசி 51 ரன்களுக்கு ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். 


 


கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட் வீழ்த்தினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண