IND vs ENG Test: டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடுகளங்கள் தொடர்பாக, இங்கிலாந்து துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து, முதல் இரண்டு போட்டிகளுக்காக ரோகித் சர்மா தலைமையில், 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய மைதானங்கள் யாருக்கு சாதகமாக அமைக்கப்படும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
ஆச்சரியமில்லை - ஒல்லி போப்:
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான பயிற்சிக்காக அபுதாபிக்கு புறப்படும் முன்பு, இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது, “இந்தியா தொடரில் ஆடுகளத்திற்கு வெளியில் இருந்து ரசிகர்களால் அதிக சத்தம் இருக்கும். ஆடுகளங்கள் ஒரு பெரிய பேசும் புள்ளியாக இருக்கலாம். ஆனால் இரண்டு அணிகளும் ஒரே விக்கெட்டில் விளையாடுவதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாங்கள் எங்களால் முடிந்தவரை அந்த சூழலுக்கு தயாராக வேண்டும். இங்கிலாந்தில், நாங்கள் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தில் அதிக புற்களை விட்டுவிடுவோம். எனவே இந்தியாவும் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்த அமைப்பதில் ஆச்சரியமில்லை. குறைந்த ஸ்கோர்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
”நாங்க குறை சொல்ல மாட்டோம்”
தென்னாப்பிரிக்கா - இந்தியா டெஸ்ட் போட்டியை பார்த்தேன். அது அருமையாக இருந்தது. வீரர்கள் கடுமையாக போராடி ரன்களை சேர்த்தனர். இதேபோன்ற சூழலை தான் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். ஆனால் முதல் பந்திலிருந்தே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், நாங்கள் எந்த குறையும் சொல்லமாட்டாம். அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முறையைக் கண்டுபிடிக்க முயற்செய்வோம்” ஒல்லி போப் தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டே நாட்களில் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா, “வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரம், இந்தியாவிற்கு வருகை தரும் அணிகள் அங்குள்ள ஆடுகளங்களை மட்டும் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி:
தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவர் 2ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோட்டிலும் தொடங்குகிறது. நான்காவது போட்டி பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவிலும் தொடங்குகிறது.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில்,ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆவேஷ் கான்