IND Vs ENG Old Trafford: பந்துவீச்சாளர்களுக்கான வேலைப்பளுவை குறைக்கவே, போட்டியை முடிக்க கேட்டுக்கொண்டதாக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் விளக்கமளித்துள்ளார்.

Continues below advertisement

ட்ராவில் முடிந்த ஓல்ட் ட்ராஃபர்ட் டெஸ்ட்:

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி எளிதில் வென்று விடு என கருதப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்கள் அட்டகாசமான பேட்டிங்கால் தோல்வியை தவிர்த்து, தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டித்தனர். இதனிடையே, 15 ஓவர்கள் மீதமிருந்தபோதே போட்டியை ட்ரா செய்துகொள்ளலாம் என்ற பென் ஸ்டோக்ஸின் முன்மொழிவை, இந்திய வீரர் ஜடேஜா நிராகரித்தார். இதுதற்போது பேசுபொருளாகியுள்ளது. ஜடேஜா செய்தது சரியா? தவறா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

டைம் இல்லை..டயர்டா இருக்கு - ஸ்டோக்ஸ்

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டோக்ஸ், “போட்டி சமனில் முடிவதை தவிர்க்க முடியாத சூழலில், அணியின் எந்தவொரு நட்சத்திர பந்துவீச்சாளரையும் பணயம் வைக்க நான் விரும்பவில்லை. இன்னும் 3 நாட்கள் இடைவெளியிலேயே தொடரை தீர்மானிக்க உள்ள கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. எங்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு உள்ளது. எங்களது வீரர்களை பாதுகாக்கும் முயற்சியாகவே முன்கூட்டியே போட்டியை முடித்துக் கொள்ள கேட்டேன். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 5 நாட்கள் முழுமையாக நடைபெற்றது. இங்கேயும் அதுவே நடந்துள்ளது. வலியும் ஒருவித உணர்ச்சி தான், வீரர்கள் சோர்வாக இருக்கின்றனர்” என ஸ்டோகஸ் தெரிவித்தார்.

Continues below advertisement

ஜடேஜா செய்தது சரியே.. - கேப்டன் கில்

ஜடேஜாவின் முடிவை முழுமையாக ஆதரித்து பேசிய கேப்டன் கில், “அது முற்றிலும் களத்தில் இருந்த வீரர்களின் முடிவு. ஆனால், அவர்கள் சிறப்பாக விளையாடியதை நாங்கள் உணர்ந்தோம். இருவருமே சுமார் 90 ரன்களை சேர்த்து இருந்தபோது தான், ஸ்டோக்ஸ் அந்த முன்மொழிவை கொண்டுவந்தார். ஆனல, இருவருமே சதமடிக்க தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்பினோம்” என கில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தனிப்பட்ட மைல்கல்லை எட்டுவதற்கானது என்பதோடு இல்லாமல், இங்கிலாந்து வீரர்களை சோர்வடைய செய்யவும், அவர்களை மனதளவில் பலவீனப்படுத்தவும் இந்தியா முன்னெடுத்த திட்டம் என்றும் கூறப்படுகிறது.

கம்பீர் கேட்ட கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர், “ஒருவர் 90 ரன்களை சேர்த்துள்ளார், மற்றொருவர் 85 ரன்களை விளாசியுள்ளார். அவர்கள் தங்களது சதத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பளிக்கக் கூடாதா? இங்கிலாந்து வீரர்கள் இந்த நிலையில் இருந்திருந்தால் அவர்கள் வெளியேறி இருப்பார்களா? கண்டிப்பாக இல்லை. எங்கள் வீரர்கள் மோசமான சூழலை கட்டுக்குள் கொண்டு வந்து சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் தங்களது சதத்தை உழைத்து சம்பாதித்தார்கள். யாரையும் திருப்திபடுத்த நாங்கள் இங்கு வரவில்லை” என கம்பீர் காட்டமாகவே பதிலளித்தார்.

ஜடேஜா..சுந்தர் சதம்

ஸ்டோக்ஸ் ஆட்டத்தில் ஒரு மணி நேரம் மீதமிருந்தபோது போட்டியை முடிவுக்கு கொண்டு வர பரிந்துரைத்தார். அப்போது ஜடேஜா 89 ரன்களுடனும், சுந்தர் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்களை சேர்த்து 75 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால், ஸ்டோக்ஸின் பரிந்துரையை நிராகரித்த ஜடெஜா, ஹாரி ப்ரூக்ஸின் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அவரை தொடர்ந்து போட்டியின் கடைசி பந்தில் ஒரு ரன் சேர்த்து, டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பூர்த்தி செய்தார்.