இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 669 ரன்களை எடுத்தது.
கே.எல்.ராகுல் - சுப்மன்கில்:
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலே இங்கிலாந்து அதிர்ச்சி தந்தது. கிறிஸ் வோக்ஸ் வீசிய அந்த ஓவரில் அடுத்தடுத்த பந்தில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அவுட்டாகினர். ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியாவிற்காக கேப்டன் சுப்மன்கில் மற்றும் அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனுமாகிய கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்து ஆட்டத்தை டிரா செய்ய வேண்டுமென்றால் இவர்கள் இருவரும் மைதானத்தில் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியம் என்பதை இருவரும் நன்றாகவே உணர்ந்தனர். சுப்மன் கில் தொடக்கத்தில் சற்று அதிரடி காட்ட கே.எல்.ராகுல் மிகவும் நிதானமாக ஆடினார்.
வேகம், சுழல் தாக்குதல்:
நெருக்கடி நிலையில் இருந்த இந்திய அணியின் விக்கெட்டுகளை மேலும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், ப்ரைடன் கார்ஸ், லியாம் டாவ்சன் மற்றும் ஜோ ரூட் பந்துவீசினர். வேகம், சுழல் என மாறி, மாறி தாக்குதல் நடத்தியும் இவர்கள் இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர்.
மைதானத்தில் நங்கூரமிட்ட இவர்கள் இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் விளாசினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 87 ரன்களுடனும், கேப்டன் கில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
டிரா ஆகுமா?
கடைசி நாளான இன்று ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக நடக்கும் என்று கருதப்படுகிறது. 137 ரன்கள் இன்னும் பின்தங்கியுள்ள இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் அசாத்தியமான ஒன்றாகும். ஏனென்றால், மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கிறது.
இதனால், இன்று விக்கெட் இழக்காமல் ஆடி இரண்டாவது இன்னிங்சில் வலுவான ரன்களை குவித்து டிக்ளேர் செய்து ஆட்டத்தை டிரா செய்வதே இந்தியாவின் நோக்கமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடைசி நாளான இன்று இந்திய அணி மேற்கொண்டு 137 ரன்களை விக்கெட் இழக்காமல் கடப்பதுடன் இன்று முழுவதும் பேட்டிங் செய்வதே தோல்வி அடையாமல் இருக்க வழியாகும்.
அதேசமயம், இங்கிலாந்து அணியின் முன்பு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் அவர்கள் பந்துவீச்சில் நெருக்கடி அளிக்க ஆயத்தமாக இருப்பார்கள். நேற்று பந்துவீசாத கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று பந்துவீச வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
பேட்டிங்கில் இனி யார்?
காயம் அடைந்த ரிஷப்பண்ட் இன்று களமிறங்குவாரா? என்பது கேள்விக்குறியாகும். பின்வரிசையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் மட்டுமே பேட்டிங்கில் உள்ளனர். இதனால், நேற்று மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது போல இன்றும் கே.எல்.ராகுல் - சுப்மன்கில் ஜோடி ஆதிக்கம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இழக்க நேரிடும். டிரா செய்தால் அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.