இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அபார சதம் அடித்து அசத்தினர். 


இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில்5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தர்மசாலா மைதானத்தில் நேற்று தொடங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டி இந்திய அணி வீரர் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 


இதனிடையே பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியை எழுச்சிக் கொள்ளா வண்ணம் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பவுலிங் செய்தனர். இதனால் சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி அதிகப்பட்சமாக 79 ரன்கள் எடுத்தார். 3 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் 57.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. 


இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோகித் சர்மா 52 ரன்களுடனும் சுப்மன் கில் 26 ரன்களுடனும் இருந்தனர். தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 


இப்படியான நிலையில் இன்று 2 ஆம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் இன்னிங்ஸில் பந்து வீச்சில்  இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் தண்ணி காட்டிய நிலையில், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சானது சுத்தமாக எடுபடவில்லை.