ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 11வது சதம் இதுவாகும். இதுவரை மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த ஒரே இந்திய கேப்டன் ரோஹித் சர்மாதான். ஆனால் இதையும் மீறி ஹிட்மேன் சதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ராஜ்கோட் டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, ரோஹித் சர்மா சதம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர், “ எனக்கு, என் நாட்டுக்காக நான் அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் முக்கியம். நாட்டுக்காக நான் அடிக்கும் ஒவ்வொரு சதமும் முக்கியம். நான் சதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர் அல்ல” என்று கூறினார்.
3வது டெஸ்டில் சதம் விளாசிய ரோஹித் சர்மா:
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா சூப்பராக விளையாடி சதம் அடித்தார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸிலும் முறையே 24 மற்றும் 39 ரன்கள் எடுத்தார். இதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மா 14 மற்றும் 13 ரன்கள் எடுத்தார். ஆனால், ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், ரோஹித் சர்மா 196 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 131 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்குகிறது.
கேப்டன் ரோஹித்தின் வரலாற்று சாதனை :
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராஜ்கோட் டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு 8-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். ராகுல் டிராவிட் 25 டெஸ்டில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ளார். அதே சமயம் இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 40 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற கேப்டன்:
- விராட் கோலி - 40 வெற்றி
- எம்எஸ் தோனி - 27 வெற்றி
- சவுரவ் கங்குலி - 21 வெற்றி
- முகமது அசாருதீன் - 14 வெற்றி
- சுனில் கவாஸ்கர் - 9 வெற்றி