இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதையடுத்து, ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு 2வது ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது.
சுப்மன்கில் சதம்:
கடந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, துணை கேப்டன் சுப்மன்கில்லுடன் விராட் கோலி களமிறங்கினார். இருவரும் இணைந்து நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடினர். கடந்த போட்டியில் 5 ரன்னில் அவுட்டான விராட் கோலி இந்த போட்டியில் சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து அடித்து ஆடி அரைசதம் கடந்தனர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி 52 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து சிறப்பாக ஆடினார். மிகவும் சிறப்பாக ஆடிய சுப்மன்கில் சதம் அடித்து அசத்தினார். 112 ரன்கள் எடுத்திருந்த சுப்மன்கில் அடில் ரஷீத் பந்தில் போல்டானார். அவர் 102 பந்துகளில் 13 பவுண்டரி 3 சிக்ஸருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி:
அடுத்து வந்த கே.எல்.ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் பந்துகளை பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோரச் மளமளவெனஉயர்ந்தது. அரைசதம் கடந்தும் அதிரடியாக ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுட்டானார்.
356 ரன்களுக்கு அவுட்:
அவர் 64 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 38.2 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி 400 ரன்களை எட்டும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் 9 பந்துகளில் 2 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுலும் 29 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி கட்டத்தில் அக்ஷர் படேல் 13 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள், ஹர்ஷித் ராணா 13 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் எடுத்திருந்தது.
இங்கிலாந்து அணிக்காக அதிகபட்சமாக ரஷீத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், மகமூத், அட்கின்ஸன் மற்றும் ஜோ ரூட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி நிர்ணயித்த 357 ரன்களை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.