லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஜேசன் ராயும், ஜானி பார்ஸ்டோவும் மிகவும் நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 41 ரன்களை எட்டியபோது ஜேசன் ராய் ஹர்திக் பாண்ட்யா பந்தில் 23 ரன்களில் அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் நிதானமாக ஆடி வந்த ஜானி பார்ஸ்டோ சாஹல் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதன்பின்னர், சாஹல் சுழலில் இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள் சிக்கினர். ஜோ ரூட் 11 ரஜன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேப்டன் பட்லரை 4 ரன்களில் போல்டாக்கினார் முகமது ஷமி. சிறிது நேரத்தில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் 21 ரன்கள் அடித்த நிலையில் சாஹல் சுழலில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
102 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை மொயின் அலியும், லிவிங்ஸ்டனும் மீட்க போராடினர். ஆனால், ஹர்திக் பாண்ட்யா பந்தில் லிவிங்ஸ்டன் 33 ரன்களில் அவுட்டானர். இதன்பின்னர், டெயிலண்டரான டேவிட் வில்லி துணையுடன் மொயின் அலி தனி ஆளாக போராடினார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலியும் யுஸ்வேந்திர சாஹல் சுழலில் சிக்கினார். அவர் சாஹல் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயின் அலி 64 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி – டேவிட் வில்லி பார்ட்னர்ஷிப் மட்டும் 62 ரன்களை எடுத்தனர்.
மொயின் அலி அவுட்டானாலும் மறுமுனையில் டேவிட் வில்லி மிகவும் பொறுப்பாக ஆடினார். அவர் ஓரிரு ரன்களாக சேர்த்தார். மிகவும் சிறப்பாக ஆடிய டேவிட் வில்லி 49 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசியில் இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சாஹல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும், ஷமி, பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்