இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 


வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.


இந்திய அணி வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து வங்க தேச அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.


இச்சூழலில், இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், டாஸ் வென்ற வங்க தேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 


 






முன்னதாக முதல் ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.  பவுலிங்குக்கு சாதகமான இந்த மைதானத்தில்  முதல் போட்டியின் வெற்றி உற்சாகத்துடனும் தொடரைக் கைப்பற்றும் உறுதியுடன் வங்க தேசம் இன்று களமிறங்கும் நிலையில், இன்றைய போட்டியில் வென்று இந்தியா தொடரைத் தக்க வைக்குமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


முன்னதாக ஷேர்-இ-பங்களா மைதானத்தில் மைதானத்தில் 22 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 14 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மழை காரணமாக ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.