Shubman Gill: காலியான கோலி! சுளுக்கெடுக்கும் சுப்மன்கில்! சூடுபிடித்த IND vs BAN

IND vs BAN Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ரோகித், விராட் கோலி விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் சுப்மன்கில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

Continues below advertisement

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

Continues below advertisement

அதிரடி தொடக்கம் தந்த ரோகித்:

இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் இணைந்து அடித்தே ஆடினர். பவர்ப்ளே என்பதால் முதல் 10 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன்கில் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாச கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அவர் பவுண்டரிகளை விளாச கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். டஸ்கின் அகமது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து இறங்கி வந்து அடித்தபோது அந்த பந்து ரிஷத் ஹொசைனிடம் கேட்ச் ஆகியது. 

சுப்மன்கில் அபாரம்:

இதையடுத்து, தற்போது சுப்மன்கில் - விராட் கோலி ஜோடி ஆடியது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  ரோகித் சர்மா விக்கெட் விழுந்தாலும் மற்றொரு தொடக்க வீரரான சுப்மன்கில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 69 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரைசதம் விளாசியுள்ளார்.. சமீபத்தில் இங்கிலாந்திற்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தார். 

சுப்மன்கில் ஆடிய ஷாட்கள் எந்த வித பதட்டமுமின்றி மிகவும் நேர்த்தியாக இருந்தது. 25 வயதான சுப்மன்கில் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக கருதப்படுகிறார். மேலும், நேற்று முன்தினம் ஐசிசி வெளியிட்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டியில் நம்பர் 1 வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 

வெற்றி முக்கியம்:

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் எளிதானதாக மாறிவிடும். அடுத்து நடக்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது எளிதாகிவிடும். 

தெளகித் - ஜாகர் அலி அபாரம்:

முன்னதாக, வங்கதேச அணிக்காக களமிறங்கிய செளமியா சர்கார், கேப்டன் ஷாண்டோ அடுத்தடுத்து டக் அவுட்டாக, தன்ஷித்  25 ரன்னில் அவுட்டாக 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணிக்காக தெளகித் - ஜாகர் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

ஜாகர் அலி 68 ரன்னில் அவுட்டாகினார். ஆனாலும், தனி ஆளாக இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்த தெளகித் சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி விக்கெட்டாக வெளியேறினார். இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுப்மன்கில் மொத்தம் 796 புள்ளிகளுடன் தற்போது ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் உள்ளனர். ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர். 

Continues below advertisement