வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் அஸ்வினின் அபார சதத்துடன் 376 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரிஷப்பண்ட் சதம்:
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா சொற்ப ரன்களில் அவுட்டாக தவறான அவுட்டால் விராட் கோலி 17 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, நேற்று ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் – சுப்மன்கில் ஜோடி வங்கதேச பந்துவீச்சாளர்களை அபாரமாக எதிர்கொண்டு ஆடி வருகின்றனர்.
சிறப்பாக ஆடிய ரிஷப்பண்ட் 124 பந்துகளில் சதம் விளாசினார். விபத்தில் சிக்கி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் ரிஷப் பண்ட், விபத்திற்கு பிறகு தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் விளாசி அசத்தியுள்ளார். சதம் விளாசிய ரிஷப்பண்ட் 128 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்ஸருடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விபத்திற்கு பிறகு சதம்:
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் திரும்பிய ரிஷப்பண்ட் மீது தொடர்ந்து எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நேற்று இந்திய அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்த நேரத்தில் சுப்மன்கில் – ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தனர். இவருவரும் இணைந்து வங்கதேச பந்துவீச்சை சமாளித்தனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ரிஷப்பண்ட் பின்னர் அதிரடி காட்டத் தொடங்கினார்.
இதன் காரணமாக 26 வயதான ரிஷப்பண்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6வது சதத்தை இன்று விாசினார். விபத்திற்கு முன்பு ரிஷப்பண்ட் வங்கதேச அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார். அதன்பின்பு, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் வங்தேச அணிக்கு எதிராக ரிஷப்பண்ட் தனது டெஸ்ட் கம்பேக்கை அளித்தார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்:
பொதுவாக, அதிரடி வீரர்கள் பலரும் டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் எடுக்கத் தடுமாறுவார்கள். ஆனால், ரிஷப்பண்ட் சிவப்பு நிற பந்தில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாகவே ஆடுவார். இது அவரது தனித்துவத்தை காட்டுகிறது. அதுபோலவே, வங்கதேசத்திற்கு எதிராகவும் அபாரமாக ஆடினார். முதல் இன்னிங்சில் 39 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்கள் எடுத்து மெஹிதி ஹாசன் பந்தில் அவுட்டாகியுள்ளார்.
ரிஷப்பண்ட் மட்டுமின்றி சுப்மன்கில்லும் சதம் விளாசியுள்ளதால் இந்திய அணி தற்போது வரை 485 ரன்களுக்கு மேலாக முன்னிலை பெற்று ஆடி வருகிறது. 3வது நாள் ஆட்டமே இன்று நடைபெற்று வரும் சூழலில், இந்திய அணி 485 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் சூழலில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.