கிரிக்கெட் உலகின் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த அணிகளில் ஒன்றாக திகழ்வது ஆப்கானிஸ்தான். அவர்கள் நாட்டில் நடக்கும் குழப்பம், தலிபான்களின் ஆட்சியின் மத்தியில் கிரிக்கெட்டில் பல தடைகளை கடந்து இன்று ஜாம்பவான் அணிகளுக்கு சவால் அளிக்கும் அணியாக தலைநிமிர்ந்து உள்ளது.
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் மோதல்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதில், முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சுருட்டி வீசி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று தொடரையும் முதன்முறையாக வென்றுள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் குர்பாஸ் – ரியாஸ் ஹாசன் ஆட்டத்தை தொடங்கினர். ரியாஸ் 29 ரன்களில் அவுட்டாக ரஹ்மத் குர்பாசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துளை பவுண்டரிக்கும் விளாசினர். அரைசதம் கடந்த குர்பாஸ் விறுவிறுப்பாக ரன்களை சேகரித்தார்.
குர்பாஸ் அபார சதம்:
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த குர்பாஸ் ஒருநாள் போட்டியில் தன்னுடைய 7வது சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்தபோது ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்பு வந்த அஸ்மத்துல்லா தென்னாப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ரஹ்மத் 50 ரன்களுக்கு அவுட்டாக, அஸ்மத்துல்லா தனி ஆளாக பவுண்டரி, சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 311 ரன்களை எடுத்தது. அஸ்மத்துல்லா 50 ஓவர்களில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம், ஸ்டப்ஸ், ஜோர்சி என பலமிகுந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால் தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானை மிரட்டும் என எதிர்பார்த்த தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கேப்டன் பவுமா – ஜோர்சி ஜோடி நிதானமாக ஆட்டத்தை தொடங்க பவுமா 38 ரன்களுக்கும், ஜோர்சி 31 ரன்களுக்கும் அவுட்டாகினர்.
சுருட்டிய வீசிய ரஷீத் - கார்தே ஜோடி:
அதன்பின்பு, ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவையும் ரஷித்கான் மற்றும் கரோதே சுருட்டி வீசினர். மார்க்ரம் 21 ரன்களில் அவுட்டாக இளம் வீரர் ஸ்டப்ஸ் 5 ரன்களில் அவுட்டாக அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சுருண்டனர். தென்னாப்பிரிக்க அணி இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றுவது இதுவே முதன்முறை ஆகும். தொடரை வென்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அனுபவ பந்துவீச்சாளர் ரஷீத்கான் 5 விக்கெட்டுகளையும், 20 வயதே ஆன இளம் வீரர் கரோதே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்தியா, ஆஸ்திரேலிய ஆகிய ஜாம்பவான் அணிகளைத் தவிர நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என ஜாம்பவான் அணிகளை ஏதாவது ஒரு கிரிக்கெட் வடிவத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது, தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு சவால் அளிக்கும் ஆப்கானிஸ்தான் அணி வருங்காலத்தில் சிம்மசொப்பனமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.