இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடரை வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2-0 என்று வென்ற சூழலில், இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் டி20 தொடர் நேற்று தொடங்கியது.


வங்கதேசத்தை வதைத்த இந்தியா:


குவாலியரில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா ஆட்டத்தை தொடங்கினர். அதிரடியாக ஆடிய சாம்சன் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


அபிஷேக் சர்மா 16 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டாக ஹர்திக் பாண்ட்யா – நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். களமிறங்கியது முதலே ஹர்திக் பாண்ட்யா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஹர்திக் பாண்ட்யாவின் No Look Shot:


குறிப்பாக, 12வது ஓவரை வீசிய டஸ்கின் அகமது வீசிய 3வது பந்தை அடிப்பது போல வந்து விட்டுவிடுவது போல நின்ற ஹர்திக் பாண்ட்யா பந்து கீப்பருக்குச் செல்லும் முன் பந்தை பார்க்காமலே தனது பேட்டால் லாவகமாக அடித்த ஷாட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பந்தை ஹர்திக் பாண்ட்யா திரும்பி பார்க்கவே இல்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற ஷாட்களை நோ லுக் ஷாட் என்று அழைப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா அடித்த அந்த பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது.






அந்த பந்து பவுண்டரிக்குச் சென்ற பிறகு ஹர்திக் பாண்ட்யா கொடுத்த போஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதேபோல, அவர் மற்றொரு பந்தை  விளாசும்போது அவரது பேட் அவரது கையில் இருந்து நழுவி வானில் பறந்தது. அதேசமயம், அந்த பந்து ஹர்திக் பாண்ட்யா பேட்டில் பட்டு பவுண்டரிக்கும் சென்றது.







அபார வெற்றி:

நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தினார். பந்துவீச்சில் 1 விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா, 16 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், இந்திய அணி 11.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.


டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, அந்த தொடரில் துணை கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஹர்திக் பாண்ட்யாவிற்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.