IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் நடைபெறும், கான்பூரில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளடு.


இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடர்:


இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி, போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே கைவிடப்பட்டது. அன்றைய நாளில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


போட்டியின் இரண்டு நாள் ஆட்டம் வீண்


தொடர்ந்து, இரண்டு நாட்கள் மழை காரணமாக, ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. நேற்று மழை பெய்யாவிட்டாலும், மைதானத்தில் தேங்கிய நீர் வடியாததால் போட்டி நடைபெறவில்லை. பல மணி காத்திருந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என இருதரப்பினரும் ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.


கான்பூரில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை:


இந்நிலையில் கான்பூரில் அடுத்த இரு நாட்களில் மழைக்கான வாய்ப்பு பெரிய அளவில் இல்லை. ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 33 செல்சியஸ் வரை வெயில் அடிக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 4-வது நாளான இன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2 நாள் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்டில் முடிவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் உள்ள இந்திய அணி, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டுகிறது. வங்கதேச டெஸ்ட் தொடரை, 2-0 என கைப்பற்றினால், மீதமுள்ள 8 போட்டிகளில் மூன்றில் வென்றாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். ஆனால், கான்பூட் டெஸ்ட் டிரா ஆகவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


அப்படி நடந்தால், உள்ளூரில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 எனவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.