வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முதல் இன்னிங்சில் சதமும், இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் கைப்பற்றிய அஸ்வின் முக்கிய காரணம் ஆவார்.


மாஸ்டர் விஜய்யாக மாறிய அஸ்வின்:


இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய அஸ்வின் அபாரமாக ஆடி சதம் விளாசுவார். அவரது சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்களை குவிக்கும்.


அஸ்வினால் கிடைத்த இந்த வெற்றிக்கு பலரும் அஸ்வினை பாராட்டி வருகின்றனர். ஆல்ரவுண்டர் அஸ்வினை ஐ.பி.எல். முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வித்தியாசமான முறையில் பாராட்டியுள்ளது. அதாவது, மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யின் அறிமுக காட்சியில் அவர் மாநகர பேருந்து ஒன்றில் ஓடி வந்து ஏறுவார். பின்னணி இசையுடன் அவர் ஓடி வந்து ஏறும் காட்சி நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான காட்சியாக உள்ளது.







வைரலாகும் வீடியோ:

அந்த காட்சியில் நடிகர் விஜய்க்கு பதிலாக அஸ்வினின் முகத்தை பொருத்தியும், பேருந்தின் உள்ளே விராட் கோலி – ரோகித் சர்மா அமர்ந்து இருப்பது போலவும் நான் வருகிறேன் என்ற சைகையுடன் அஸ்வின் உள்ளே நுழைவது போலவும் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்தியா முதல் இன்னிங்சில் 144 ரன்களுக்கு ஜெய்ஸ்வால், ரோகித்சர்மா, சுப்மன்கில், விராட் கோலி, ரிஷப்பண்ட், ராகுல் என முன்னணி வீரர்களை இழந்து தடுமாறியபோது ஜடேஜா – அஸ்வின் ஜோடி இந்திய அணியை மீட்டது.


இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்திய அணி ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதத்தால் வங்கதேசத்திற்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசத்தை அஸ்வின் தனது சுழலால் சுருட்டி வீசினார். அவர் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.