வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் அஸ்வின் சதத்தால் இந்தியா 376 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


515 ரன்கள் இலக்கு:


இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 287 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி வங்கதேச அணியை காட்டிலும் 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி டிக்ளேர் செய்த காரணத்தால் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள வங்கதேச அணிக்காக ஜாகிர் ஹாசன் – ஷத்மன் இஸ்லாம் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.


வங்கதேச அணியை 149 ரன்களுக்குள் சுருட்டிய இந்திய அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்களுக்கும், கேப்டன் ரோகித்சர்மா 5 ரன்களுக்கும் அவுட்டாகினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அம்பயரின் தவறான முடிவால் 17 ரன்களுக்கு அவுட்டானார்.

ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம்:


இதையடுத்து, ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் – சுப்மன்கில் ஜோடி மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ரிஷப்பண்ட் ஆட்டத்தை நங்கூரமிட்ட பிறகு தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.


ரிஷப்பண்ட் பவுண்டரி, சிக்ஸர் என விளாச சுப்மன்கில் நிதானமாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரிஷப்பண்ட் சதம் விளாசினார். அவர் 128 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்ஸருடன் 109 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மறுமுனையில் நிதானமாக ஆடிய சுப்மன்கில் சதம் விளாசினார்.


இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. சுப்மன்கில் 176 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல்.ராகுல் 19 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தார்.

வெற்றி பெறுமா இந்தியா?


தற்போது 515 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி ஆட்டத்தை தொடங்கி ஆடி வருகிறது. மிகப்பெரிய இலக்கு என்பதால் பொறுமையாகவும், அதேசமயம் கவனமாகவும் ஆட வேண்டிய அவசியம் வங்கதேச வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் அசத்திய பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா இந்த இன்னிங்சிலும் பந்துவீச்சில் அசத்தினால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற முடியும்.


இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இந்த போட்டியில் பிரகாசமாக உள்ள நிலையில், இரண்டு நாட்கள் போட்டி முடிய இன்னும் இருப்பதால் வங்கதேச அணியும் வெற்றிக்காக போராடும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் அதிகரிக்கும்.