Women's T20 World Cup 2024: மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை துபாயில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குரூப் ஏ-வில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இந்திய அணி முதல் போட்டியில் மோசமான தோல்வியை கண்டாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை குவித்துள்ளது. அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க, இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் அவசியமாகும். இதனால், இந்த போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஹாட் ஸ்டார் அலைவரிசையிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
அணிகளின் நிலவரம் என்ன?
இந்திய அணியை பொறுத்தவரையில், பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய மூன்று பிரிவுகளிலும், கடைசி இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதே நிலையை தொடர்ந்தால்,இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுவது உறுதி. அதேநேரம், அரையிறுதி வாய்ப்புக்கு நியூசிலாந்து அணியும் முயற்சித்து வருகிறது. எனவே, இன்றைய போட்டியில் வெற்ற் பெறுவதோடு, ரன் ரேட்டிலும் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியையே சந்திக்காத வலுவான அணியாக உள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீராங்கனைகளான கேப்டன் அலிசா ஹேலி மற்றும் டைலா வ்லேம்னிக் ஆகியோர் காயமடைந்தனர். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 8 முறையும், ஆஸ்திரேலிய அணி 25 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
பிட்ச் ரிப்போர்ட்:
ஷார்ஜா மைதானம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் உதவுகிறது. போட்டியின் தொடக்கத்தில் வேகமானதாக அறியப்படுகிறது. தொடர்ந்து நேரம் செல்ல செல்ல ஆடுகளம் மெதுவாகத் தொடங்கும். சிறிய பவுண்டரி எல்லைகள் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவிக்க உதவுகின்றன, மேலும் இந்த இடத்தில் டார்கெட்டை சேஸ் செய்வது எளிதானது. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்யும்.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேட்ச்), ரிச்சா கோஷ்(வி.கீ.,), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா, சஜீவன் சஜனா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ரேணுகா சிங்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி, பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஜார்ஜியா வேர்ஹாம், தஹ்லியா மெக்ராத், அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஷட், டெய்லா விலேமின்க்.