ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை நடைபெற இருக்கிறது. 


ஆஸ்திரேலியா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்திற்கான 17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அறிவிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இஷான் கிஷனும், இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார்யாதவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முதுகு காயத்திலிருந்து தற்போது மீண்டு வருவதால் இந்திய அணியில் இடம்பெறவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜெய்தேவ் உனட்கட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.


இந்தநிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் எந்தெந்த பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் என்பதை இங்கு பார்க்கலாம். 


அனில் கும்ப்ளே:


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே பெயர் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கும்ப்ளே 30.32 சராசரியுடன்  20 போட்டிகளில் 38 இன்னிங்ஸ்களில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


ஹர்பஜன் சிங்:


இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஹர்பஜன் சிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 29.95 சராசரியுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


நாதன் லயன்:


இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவர் இந்தியாவிற்கு எதிரான 22 போட்டிகளில் 41 இன்னிங்ஸ்களில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 34.75 ஆக உள்ளது. இம்முறையும் ஆஸ்திரேலிய அணியில் லயன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் அவர் முதலிடத்தை தொட வாய்ப்புள்ளது. 


ரவிசந்திரன் அஷ்வின்:


இந்த டாப்-5 பட்டியலில் தற்போதைய இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரவிசந்திரன் அஸ்வின் 4வது இடம்பிடித்துள்ளார். அஸ்வின் 18 போட்டிகளில் 34 இன்னிங்ஸ்களில் 31.48 பந்துவீச்சு சராசரியில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் அஸ்வினும் இந்த முறை முன்னேறலாம்.


கபில்தேவ்:


உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கபில்தேவ் ஐந்தாவது இடத்தில் உள்ளார். கபில்தேவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 38 இன்னிங்ஸ் 20 போட்டிகளில் விளையாடி 25.35 சராசரியுடன் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 


டெஸ்ட் தொடர்:


பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்


ஒருநாள் தொடர்:


மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.


குறிப்பு: ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.


இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்