இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி ராகுல், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 208 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கேம்ரூன் க்ரீன் மற்றும் மேத்யூ வேட் அதிரடி காட்டினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 208 ரன்களை சேஸ் செய்து அசத்தலாக வெற்றி பெற்றது. 


இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி தொடர்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி, “நேற்றைய போட்டியில் பனி பரிசாக இருந்ததாக தெரியவில்லை. வீரர்கள் யாரும் பந்தை அடிக்கடி துடைத்து நாம் பெரிதாக பார்க்கவில்லை. அப்படி இருக்கும் போது இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக அமைந்தது. 


குறிப்பாக புவனேஸ்வர் குமார் மாதிரியான ஒரு அனுபவ பந்துவீச்சாளர் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவது பெரும் ஏமாற்றமாக உள்ளது. கடைசியாக நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் டெர்த் ஓவர்களில் புவனேஸ்வர் குமார் 49 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். அவருடைய அனுபவத்தை பார்க்கும் போது இந்த மூன்று போட்டிகள் அவர் 35 ரன்கள் வரை கொடுத்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும். அவருடைய பந்துவீச்சு சரியாக அமையவில்லை. 


 






மேலும் கடந்த சில காலங்களாக இந்திய அணியால் ஸ்கோரை வெற்றிகரமாக டிபெண்ட் செய்ய முடியவில்லை. இந்த பிரச்னை தொடர்ந்து இந்திய பந்துவீச்சில் இருந்து வருகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நேற்று இந்திய அணியின் வீரர்கள் சரியாக விக்கெட் வீழ்த்தவில்லை. அதனால் ஆஸ்திரேலிய அணி நல்ல தொடக்கத்தை பெற்றது” எனத் தெரிவித்துள்ளார். 


இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கடைசியாக ஆசிய கோப்பை தொடரின் இரண்டு சூப்பர் 4 போட்டியிலும் டெர்த் ஓவர் மோசமாக பந்துவீசினார். குறிப்பாக இலங்கை அணிக்கு எதிராக 19வது ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். அதன்பின்னர் நேற்று ஆஸ்திரேலிய போட்டியில் 19வது ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார். டெர்த் ஓவரில் புவனேஸ்வர்குமார் போன்ற அனுபவ வீரர் சொதப்பி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தன்னுடைய தவறை திருத்தி கொண்டு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடர் நெருங்கும் சூழலில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.