இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் நேற்று முடிவடைந்தது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளன. இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி இன்று ஹைதரபாத்தில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்பட்டது. மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

இந்நிலையில் ஐசிசியின் டி20 தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அத்துடன் முதலிடம் மற்றும் இரண்டாவது இடத்திற்கான இடைவேளையையும் அதிகரித்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்கு தரவரிசையில் 268 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் இந்திய அணி தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள இங்கிலாந்து அணியைவிட 7 புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ளது. 

 

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக அந்த அணியின் தரவரிசை புள்ளிகள் சற்று குறைந்துள்ளன. தரவரிசையில் 3வது இடத்தில் 258 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. 

ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல்:

அணிகள் புள்ளிகள்
இந்தியா 268
இங்கிலாந்து 261
தென்னாப்பிரிக்கா 258
பாகிஸ்தான் 258
நியூசிலாந்து 252

 

இந்திய அணி வரும் புதன்கிழமை முதல் தென்னாப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:

செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி

அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி

அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி

அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி

அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி

அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி

 

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ஷமி விலகினார். அதன்பின்னர் இன்னும் அவர் தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. இது தொடர்பாக பிசிசிஐ தொடர்ந்து மருத்துவர்களிடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.