பார்டர்- கவாஸ்கர் டிராபி 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 17 ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி தயாராகிவிட்டது. கடந்த 36 வருடங்களாக இந்த மைதானத்தில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோற்றதில்லை.


இந்தநிலையில், இந்த மைதானத்தில் முறியடிக்கப்படாத சாதனைகளின் பட்டியலை இங்கே காணலாம். 


இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. முதல் போட்டியானது கடந்த 1948 இல் நடைபெற்றது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே முதல் போட்டி 1948 ம் ஆண்டு நடைபெற்றது. அதில், இந்தியாவே வெற்றிபெற்றது. 


கடைசியாக 2017-ம் ஆண்டு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி டிராவில் முடிந்தது. 


இந்திய அணியின் வெற்றி:


டெல்லியில் உள்ள அருண் மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 13 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகளில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அணிகள் வெற்றி பெற்றன. மொத்தம் 15 போட்டிகள் டிராவில் முடிந்தது. அதாவது இங்கு விளையாடிய போட்டிகளில் கிட்டத்தட்ட 45 சதவீதம் (44.12%) டிரா ஆனது.


டாஸ் வென்ற அணிகளின் நிலைமை:


இங்கு டாஸ் வென்ற அணிகள் இதுவரை மொத்தம் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மறுபுறம், டாஸ் இழந்தாலும், இந்திய அணி 13 போட்டிகளில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த அணி 6 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 


சிறந்த தனிநபர் ஸ்கோர்:


விராட் கோலி 2017ல் இலங்கைக்கு எதிராக விளையாடிய போது இந்த மைதானத்தில் 243 ரன்கள் எடுத்தார். இந்த மைதானத்தில் ஒரு வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.


கடந்த 1959ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 644 ரன்களை அடித்ததே ஒரு இன்னிங்ஸில் சிறந்த ஸ்கோராக இருந்தது . இதையடுத்து இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது. இந்த மைதானத்தில் இதுவரை ஒரு இன்னிங்ஸில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும்.


ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர்:


1987ல் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது ஒரு இன்னிங்சில் எந்த அணியும் அடித்த குறைந்த ஸ்கோராகும்.


சிறந்த பந்து வீச்சாளர்:


அனில் கும்ப்ளே 1999ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 74 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த மைதானத்தில் இதுவே சிறந்த பந்துவீச்சாகும்.






டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. நாக்பூரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. இன்னிங்ஸ் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற மூன்றாவது பெரிய வெற்றி இதுவாகும்.