இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு தனிப்பட்ட காரணங்களால் ரோகித் சர்மா ஆடாத சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா களமிறங்குகிறார்.
ஆஸ்திரேலியாவில் ரோகித் சர்மா:
இதனால், இரண்டாவது போட்டி முதல் இந்த தொடரில் மீண்டும் கேப்டன்சி ரோகித் சர்மா வசம் செல்கிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக வரும் 6ம் தேதி தொடங்க உள்ளது.
இதற்காக இந்திய அணி தற்போது பிங்க் நிற பந்தில் ஆஸ்திரேலிய பிரசிடென்ட் லெவல் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது.
மும்பை கா ராஜா:
இந்த போட்டி தற்போது கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஃபீல்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி களமிறங்கியபோது, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ரோகித்.. ரோகித் என்று கோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
மைதானத்தில் கூடியிருந்த ரசிகர் ஒருவர் “ரோகித் சர்மா மும்பை கா ராஜா” என்று கோஷம் எழுப்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிய ரோகித் சர்மாக கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால், அவரை கடந்த முறை ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் நியமித்தது.
அந்த தொடர் முழுவதும் மும்பை இந்தியன்ஸ் ஆடிய ஆட்டங்களில் மும்பை ரசிகர்கள் சிலர் ஹர்திக் பாண்ட்யாவை விமர்சித்தும், மைதானத்தில் ரோகித் மும்பை கா ராஜா என்று கோஷங்களை எழுப்பியும் வந்தனர். அப்போது இந்த விவகாரம் பெரியளவில் பேசப்பட்டது. பின்னர், ஹர்திக் பாண்ட்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் தெரியவந்த பிறகு ரசிகர்கள் பாண்ட்யாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர், டி20 உலகக்கோப்பை வெல்ல இந்திய அணி வெல்ல ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணமாக திகழ்ந்ததுடன், துணை கேப்டனாகவும் அந்த தொடரில் விளங்கினார்.