பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கம்மின்ஸ் இந்திய அணியை பந்துவீச அழைத்தார்.
இந்தியாவை விளாசிய சாம் கோன்ஸ்டாஸ்:
கடந்த 3 டெஸ்ட் போட்டிகளாக சொதப்பிய மெக்ஸ்வீன்சிக்கு பதிலாக 19 வயதே ஆன சாம் கோன்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கினார். ஆட்டம் தொடங்கியது முதலே சாம் கோன்ஸ்டாஸ் ஒருநாள் போட்டி போல ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசிய அவரை அவுட்டாக்க இந்திய கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முயற்சிகள் உடனடியாக கைகொடுக்கவில்லை.
குறிப்பாக, இந்தியாவின் நட்சத்திர வீரரான பும்ராவையே சாம் கோன்ஸ்டாஸ் அடித்து ஆடினார். பும்ரா பந்துகளை மிக எளிதாக சாம் கோன்ஸ்டாஸ் ஆடினார். பும்ரா மட்டுமின்றி சிராஜ் பந்தையும் அவர் விளாசினார்.
கோலி - சாம் கோன்ஸ்டாஸ் மோதல்:
அவ்வப்போது ஆஸ்திரேலிய ரசிகர்களைப் பார்த்து கைகளைத் தட்டுங்கள் என்றும் சைகை காட்டினார். இந்திய வீரர்கள் அவருடன் வார்த்தைப் போரிலும் ஈடுபட்டனர். அப்போது, ஓவரின் இடையில் விராட் கோலி எதிரே வந்த சான் கோன்ஸ்டாஸ் மீது இடித்தார்.
சாம் கோன்ஸ்டாஸ் அப்போது கோலியைப் பார்த்து என்ன என்பது போல கேட்டார்? அதற்கு விராட் கோலியும் ஏதோ கோபமாக பதில் கூறினார். பதிலுக்கு அவர் ஏதோ கூற, கோலி பந்தை காட்டி ஏதோ கூறினார். அப்போது, ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இருவரையும் சமாதானப்படுத்தினார். அப்போது, நடுவரும் இருவரையும் சமாதானப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
60 ரன்களில் அவுட்:
பின்னர், தொடர்ந்து ஆடிய சாம் கான்ஸ்டோஸ் 60 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா சுழலில் அவர் எல்.பி.டபுள்யூ ஆனார். அவர் 65 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60 ரன்கள் எடுத்தார். பும்ரா, சிராஜ் ஆகிய இருவரது 54 பந்துகளில் மட்டும் 52 ரன்கள் எடுத்தார் சாம் கோன்ஸ்டாஸ்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல இந்தியா - ஆஸ்திரேலிய இரு அணிகளும் மல்லுகட்டி வருகின்றனர். 1-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் சமநிலையில் தற்போது உள்ள நிலையில், இந்திய அணி இந்த போட்டி மற்றும் அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டி வாய்ப்பை பலப்படுத்தலாம்.