இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதம் மற்றும் லபுஷேனின் 72 ரன்கள் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களை எடுத்தது.

என்னாச்சு ரோகித்?


இந்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. இந்த தொடரில் கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் ஜோடியே ஆட்டத்தைத் தொடங்கி வருகின்றனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் ஆட்டத்தில் ஆடாதபோது, இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அடுத்த இரு போட்டிகளிலும் ரோகித் சர்மா பின்வரிசையில் இறங்கினார். 






தொடக்க வீரர் ரோகித் சர்மா பின்வரிசையில் இறங்கியதால் தடுமாறினார். இதையடுத்து, பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் மீண்டும் தனது தொடக்க வீரர் நிலையிலே ரோகித் சர்மா இன்று களமிறங்கினார். ஆனால், அவர் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். சமீபகாலமாகவே டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா 3 ரன்களில் அவுட்டானார் என்பதை விட அவர் அவுட்டாகிய விதம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கம்பேக் தருவாரா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இருப்பினும் அடுத்தடுத்த இன்னிங்சில் ரோகித் சர்மா தொடக்க வீரராகவே களமிறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித்சர்மா எப்போது தனது பழைய ஃபார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்திய அணிக்காக தற்போது ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் ஜோடி ஆடி வருகின்றனர். 


முன்னதாக, இந்திய அணிக்கு எதிராக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் கவாஜா 57 ரன்களும், லபுஷேனே 72 ரன்களும் எடுக்க ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்து 9வது விக்கெட்டாக வெளியேறினார். 

சிராஜ் மோசம்:


இந்த தொடர் முழுவதும் இந்திய அணியை அச்சுறுத்திய டிராவிஸ் ஹெட் டக் அவுட்டானார். பின்வரிசையில் களமிறங்கிய கம்மின்ஸ் 49 ரன்களுக்கு அவுட்டானார். இந்திய அணிக்காக பும்ரா 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணியின் முகமது சிராஜ் மிகவும் மோசமாக பந்துவீசினார். அவர் 23 ஓவர்கள் பந்துவீசி 122 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.