இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரு அணிகளும் இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் உள்ள நிலையில் தொடரில் முன்னிலைப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 

300 ரன்களுக்கு மேல் டார்கெட்:


மெல்போர்னில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 354 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா குடைச்சல் தந்தார். 


அவரது வேகத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், லபுஷேனே -கம்மின்ஸ் ஜோடி களத்தில் நங்கூரமிட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். கடைசி கட்டத்தில் நாதன் லயன் ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு இலக்கை 300 ரன்களுக்கு மேல் இலக்கை கொண்டு சென்றுள்ளார்.


3 கேட்ச் தவறவிட்ட ஜெய்ஸ்வால்:


இந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய  அணி இந்தளவு ரன்களை குவிக்க இந்திய வீரர் ஜெய்ஸ்வால் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இன்று மட்டும் அவர் 3 முக்கிய விக்கெட்டுகளின் கேட்ச்களைத் தவறவிட்டார். 


ஜெய்ஸ்வால் இன்றைய ஆட்டத்தில் கவாஜா, லபுஷேனே மற்றும் கம்மின்ஸ் ஆகியோரின் கேட்ச்களைத் தவறவிட்டார். இதில் கவாஜா 21 ரன்களில் அவுட்டாக லபுஷேனே - கம்மின்ஸ் இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர். 46 ரன்களில் லபுஷேன் இருந்தபோது கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். அதன்பின்பு, களத்தில் நின்ற லபுஷேனே 70 ரன்களை குவித்தார். அவர் 139 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் கேட்ச் தவறவிட்ட கம்மின்ஸ் 7வது விக்கெட்டாக களமிறங்கி 90 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார்.

கவனம் தேவை:


ஒருவேளை ஆஸ்திரேலிய அணியின் அந்த 3 கேட்ச்களையும் ஜெய்ஸ்வால் பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். தற்போது 228 ரன்களுடன் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்க வாய்ப்பு உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கேட்ச் என்பது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். இளம் வீரர் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக கருதப்படும் நிலையில் அவர் ஃபீல்டிங்கில் இனி சொதப்பாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 82 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.