கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அதிலும் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி போட்டிக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு நிகரான எதிர்பார்ப்பு பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு உள்ளது.


பயிற்சி ஆட்டத்தில் கோலி எடுத்த ரன்கள்:


இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய வீரர்கள் தங்களுக்குள் அணியாக பிரிந்து ஆஸ்திரேலியாவில் ஆடினர்.


இதில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் எடுத்த ஸ்கோர் விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விராட் கோலி, இந்த பயிற்சி ஆட்டத்தில் வெறும் 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 61 ரன்கள் எடுத்தார்.






நியூசிலாந்திடம் படுதோல்வி:


சுப்மன்கில் 72 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாவது இன்னிங்சில் 1 ரன் ட்டுமே எடுத்தார். இளம் வீரர் சர்பராஸ் கான் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இளம் வீரர் துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்.


நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் இந்திய அணி பறிகொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மேலும்,  இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் சிக்கலாக்கிக் கொண்டுள்ளது இந்திய அணி.

நெருக்கடியில் இந்தியா:


இந்த தொடரை இந்திய  அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலே எதிர்கொள்வது, இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி பலமாக இருப்பது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் கவலைக்குரிய வகையில் இருப்பது என பல பின்னடைவுகள் இந்திய அணிக்கு உள்ளது.


இந்த சூழலில், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவில் களமிறங்கியுள்ள இந்திய அணி வீரர்களின் பேட்டிங்கே பெரும் கவலையாக உள்ளது. தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய வீரர்கள் அங்கு பயிற்சி ஆட்டத்திலே சிறப்பாக ரன்களை குவிக்க இயலாமல் தடுமாறுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


கே.எல்.ராகுல், சுப்மன்கில் காயம், ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம், முக்கிய வீரர் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் ஆகியவற்றின் காரணமாக இந்திய அணி அடுத்தடுத்த நெருக்கடியுடன் இந்த தொடரை தொடங்க உள்ளது.