நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
அதிவேக மைதானம் பெர்த்:
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்குகிறது. உலகின் அதிவேக மைதானங்களில் ஒன்றாக பெர்த் மைதானமும் திகழ்கிறது.
பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்கிறது. இந்த மைதானத்தில் 60 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். பெர்த் மைதானத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
4 போட்டியிலும் வெற்றிக்கொடி:
பெர்த் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அணியே 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. ஆஸ்திரேலியா தான் ஆடிய 4 போட்டிகளிலும் முதலில் பேட் செய்து 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 456 ரன்களை குவித்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்யும் அணி 250 ரன்களை சராசரியாக குவித்துள்ளது. 3வது இன்னிங்சில் சராசரியாக 218 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. 4வது இன்னிங்சில் சராசரியாக 183 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது.
பெர்த்தில் இந்தியா எப்படி?
அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 598 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். அந்த போட்டியில் லபுசேனே, ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சமாக பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மோசமான சாதனையாக உள்ளளது.
2018ம் ஆண்டு இதே மைதானத்தில் இந்திய அணி ஆடிய போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 283 ரன்களை எடுத்தது. அந்த இன்னிங்சில் கேப்டனாக இருந்த கோலி 123 ரன்களை எடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், அந்த தொடரை அதன்பின்பு இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வேகம், சுழல் யார்? யார்?
இதுவரை பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியே இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி மாற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட், ஸ்டார்க், போலந்து ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். நாதன் லயன் முக்கிய சுழற்பந்துவீச்சாளர் ஆவார்கள்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணைகேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார். அஸ்வின், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் முக்கிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள்.