இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தது. எனினும் ஆஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி அதை சேஸ் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.  மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 


இந்நிலையில் இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் முகமது அசாரூதின் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, “இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முறையாக விற்பனை செய்யப்பட்டன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. டிக்கெட் விற்பனை தொடர்பாக சிலர் கூறி வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை. டிக்கெட்கள் எதுவும் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 


 






இந்தப் போட்டிக்கான டிக்கெட்களை வாங்க அதிகாலை முதல் ரசிகர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக வரிசையில் நின்று கொண்ட ரசிகர்களுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக அங்கு இருந்த கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.


இந்த தடியடியில் தற்போது வரை சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


 






இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் அசாரூதின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.